வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி தொடர்பில் இரண்டு பெண்கள் மலையகத்தில் கைது .

 


 

 இளைஞர்களை ஏமாற்றி பணம் மோசடி செய்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் தொழிற்சாலை ஒன்றில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பதுளை பிரதேச இளைஞர்களிடம் பணம் பெற்ற பதுளை, தெமோதர பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் அவுஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 18 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக 4 முறைப்பாடுகள் பணியகத்திற்கு கிடைத்துள்ளன.

அதன்படி, பணியகத்தின் செல்லுபடியாகும் உரிமம் இன்றி வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்த குற்றச்சாட்டின் பேரில், பதுளை, தெமோதர பகுதியில் வைத்து விசாரணை அதிகாரிகள் இந்த இரு பெண்களையும் கைது செய்தனர்.

சந்தேகநபர்கள் இருவரும் பதுளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் நாளை பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களைத் தவிர, இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.