வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 


 

கொழும்பில் எங்காவது தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்துவதற்கு வெடிமருந்துகள் மற்றும் மைக்ரோ ரக கைத்துப்பாக்கி, கைக்குண்டு ஆகியவற்றை தம்வசம் வைத்திருந்தார் என்றக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர், குற்றவாளியாக இனங்காணப்பட்டு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்தவே, கடூழிய சிறைத்தண்டனையுடன் கூடிய வாழ்நாள் சிறைத்தண்டனையை செவ்வாய்க்கிழமை (23) விதித்துள்ளார்.

பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முறைப்பாட்டாளர் தரப்பினர் எவ்விதமான சந்தேகமும் இன்றி நிரூபித்துள்ளமையை உறுதிப்படுத்திய நீதிபதி மேற்கண்ட தண்டனையை விதித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினரான தங்கவேலு நிமலன் என்பவ​ருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரத்மலானை பிரதேசத்தில் வைத்து மேற்படி வெடிப்பொருட்களுடன் இவர் 2009 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டார். அதில் சி-4 வகையைச் சேர்ந்த அதிசக்தி வாய்ந்த வெடிப்பொருள் ஒன்றரை கிலோ கிராம் இருந்துள்ளது. அதுமட்டுமன்றி கைக்குண்டையும் தம்வசம் வைத்திருந்தார்.

இவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.  இன்றைக்கு 14 வருடங்களுக்கு முன்னர் செய்யப்பட்ட இந்த குற்றம் கடுமையானது ஆகையால், குற்றவாளிக்கு கடுமையான தண்டனையை வழங்கவேண்டுமென சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த பிரதி சொலிஸிட்ட ஜெனரல் நீதிமன்றத்திடம் கோரிநின்றார்.