ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடகிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வினை வழங்கவேண்டும் என்பதான மக்கள் பிரகடனம் குறித்தான தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு தன்னாமுனை மியானி நிலையத்தில், வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில், செயலமர்வு நடைபெற்றது. வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுகராசா தலைமையில் நடைபெற்ற செயலமர்வில், பல்கலைக்கழக மாணவர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள்,இளைஞர் யுவதிகள், அகம் மனிதாபிமான அமைப்பின் உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வடகிழக்கு மக்களுக்கான தீர்வினை நோக்கிய
100நாள் செயற்பாட்டு நாளின் இறுதி நாளில் வெளியிடப்பட்ட மக்கள் பிரகடனம்
நூலாக்கப்பட்டு அது தொடர்பிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இணைந்த வடகிழக்கின் அவசியம் அதன் மூலம் தமிழ் பேசும் மக்கள் உட்பட வடகிழக்கில் வாழ்வோர் அடையப்போகும் நன்மைகள் குறித்தும் இதன்போது
விளக்கமளிக்கப்பட்டன.