குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் ஷாபி ஷிஹாப்தீனை கைது செய்வதற்கு நியாயமான காரணம் இருந்ததால், அவர் கைது செய்யப்பட்டிருப்பது நியாயமானது என்றும் அவரது அடிப்படை உரிமைகள் மீறப்படவில்லை என்றும் உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் கே மலல்கொட அறிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு இரண்டு வாரங்களுக்குப் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும் 40 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை எப்படி சம்பாதித்தார் என்பதை வெளியிடாமல் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டமை நியாயமானது என்றும் நீதியரசர் அறிவித்தார்.
தான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என்று கோரி டொக்டர் ஷாபி தாக்கல் செய்த மனு, நீதியரசர்களான விஜித் கே மலல்கொட, யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.
அதன்போதே, நீதியரசர் விஜித் மலல்கொட மேற்குறிப்பிட்ட விடயங்களை அறிவித்ததுடன் மனுவை நிராகரிப்பதாக நீதியரசர்கள் குழாம் அறிவித்தது.
குறித்த மனுவில், குருநாகல் பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி
பொலிஸ் பரிசோதகர் புஷ்பலால், குருநாகல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி,
குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், பொலிஸ் மா அதிபர் சந்தன
விக்கிரமரத்ன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர்
ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் டொக்டர் ஷாபி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
தம்மைக் கைது செய்தமைக்கான நியாயமான காரணத்தை பொலிஸார் தெரிவிக்கவில்லை என்றும் பொய்யான மற்றும் ஆதாரமற்ற உண்மைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதன் மூலம் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் கோரியுள்ளார்.
குருநாகல் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றியபோது, பெண்களின் அனுமதியின்றி கருத்தடை செய்யப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் சிஹாப்தீன் கைது செய்யப்பட்டு, குருநாகல் பிரதான நீதவானால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
டொக்டர் மொஹமட் ஷாபி, தாய்மார்களின் கருமுட்டைக் குழாய்களை அடைத்ததாகவோ, சட்டவிரோதமான முறையில் சொத்துக் குவித்ததாகவோ அல்லது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளைப் பேணியதாகவோ இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் நிரூபிக்கப்படவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 2019 ஜூலை மாதம் குருநாகல் நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.