காய்ச்சல் எந்த வகை என அறியாமல் பெரசிடமோல் அல்லாத மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம்


 

 

 தற்போது சாதாரண வைரஸ் காய்ச்சல், டெங்கு மற்றும் இன்புளுவென்சா என காய்ச்சல் வகைகள் 03 பரவி வருகிறது. இதில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல் எந்த வகை என அறியாமல் பெரசிடமோல் அல்லாத மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் உபுல் திசாநாயக்க தெரிவித்தார்.

இவர் நேற்று (17) சுகாதார ஊக்குவிப்புப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்; தற்போது டெங்கு நோய் அதிகளவில் பரவி வருவதாகத் தெரிவித்த விசேட வைத்தியர், உங்கள் வைத்தியர் உங்களுக்கு காய்ச்சலுக்காக ஏதேனும் வலி நிவாரணியை தந்தால் அது பெரசிட்டமோல் அல்லாத வலி நிவாரணியா என வைத்தியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.

பெரசிட்டமோல் அல்லாத வலி நிவாரணி எடுத்தால் டெங்கு ஏற்பட்டால் இரத்தக்கசிவு ஏற்பட்டு ஈரல் பாதிக்கப்படுவதுடன் மரணம் ஏற்படக்கூடிய நிலையும் அதிகரிக்கும் என குறிப்பிட்டார்.

டெங்கு நோய் பரவுவதைத் தடுப்பதற்கு கர்ப்பிணித் தாய்மார்கள் இன்றியமையாத குழு எனத் தெரிவித்த நிபுணர் டொக்டர் உபுல் திஸாநாயக்க, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு டெங்கு தொற்று ஏற்பட்டால் அது மிகவும் ஆபத்தான நிலைமைக்கு வழிவகுக்கும் என்பதால் நுளம்பு விரட்டிகளைப் பயன்படுத்துமாறும் ஆலோசனை வழங்கினார்.

இன்புளுவென்சா மிகக் கடுமையாகப் பரவும் என்றும், நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளவர்களுக்கு வந்தால், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குக் காய்ச்சலும், நீண்ட நாள் இருமலும் வரலாம் என்றார்.

இதனால் நீண்டகால சுவாச நோய் உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பிரச்சினைகள் ஏற்படாது என்றும், சுவாச நோய் உள்ளவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கான வைரஸ் தடுப்பு மருந்துகள் இருப்பதாகவும் வைத்தியர் உபுல் திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.