“சிங்கள – பௌத்தமயமாக்கலுக்கு உடனடியாக முடிவு கட்டவேண்டும். நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இந்த விடயங்களை இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயிடம் வலியுறுத்தினேன். இதே கருத்துக்களை எதிர்வரும் 9 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பிலும் முன்வைப்பேன்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்புக்கள் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் திடீரென இரா.சம்பந்தனை நேரில் சென்று நேற்றுமுன்தினம் சந்தித்தார்.
இது தொடர்பில் சம்பந்தனிடம் கேட்ட போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“யாழ்ப்பாணம் – தையிட்டியில் தமிழ் மக்களின் காணியில் சட்டவிரோதமாகப் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இந்தச் சட்டவிரோத நடவடிக்கை வடக்கு – கிழக்கில் நீண்டகாலமாகத் தொடர்கின்றது. தமிழ் மக்களின் காணிகளில் சட்டவிரோதமாகப் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவது மட்டுமன்றி சில இடங்களில் சைவக்கோயில்களும் தாக்கப்பட்டு வருவதுடன் அழிக்கப்பட்டும் வருகின்றன.
கூடியளவுக்கு இந்தச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நாங்கள் முயற்சி எடுத்து வந்திருக்கின்றோம்; தொடர்ந்தும் எடுப்போம்.
இந்த நடவடிக்கைகள் முடிவுக்கு வரவேண்டுமெனில் ஒரு நியாயமான – நிரந்தரமான – தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய அதிகாரப் பகிர்வுடன் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். அதற்காக எம்மாலான அனைத்துப் பங்களிப்புக்களையும் வழங்கி வருகின்றோம்.
அரசியல் தீர்வு விரைந்து காணப்பட வேண்டும். ஏனெனில் இந்த நாடு மீண்டெழ வேண்டுமெனில் அரசியல் தீர்வு கட்டாயம் வேண்டும்.
நாளை 9 ஆம் திகதி ஜனாதிபதியை நாம் சந்திக்கவுள்ளோம். அதன்போது இது தொடர்பில் பேசுவோம்.
நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இலங்கைக்கான இந்தியத் தூதுவர் என்னை வந்து சந்தித்திருந்தார். அவரிடமும் இந்த விடயம் தொடர்பில் பேசினேன்.
அதேவேளை, ஏனைய சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடனும் வடக்கு, கிழக்கில் தொடரும் சிங்கள – பௌத்த மயமாக்கல் மற்றும் அரசியல் தீர்வு விரைந்து காணப்பட வேண்டும் என்பவை தொடர்பில் பேசி வருகின்றோம்.” – என்றார்.