எதிர்வரும் 10ஆம் திகதியளவில் சூறாவளி உருவாவது இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களத்தினாலும் இந்திய வானிலை ஆய்வு மையத்தினாலும் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக வங்காளவிரிகுடா கடல் பிராந்தியத்தில் உருவாகி இருந்த காற்று சுழற்சியானது (Cyclonic Circulation) நேற்று (08.05.2023) கடலுடன் இணைந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாக (Low Pressure Area)
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பிராந்தியத்தில் வலுவடைந்து உள்ளது.
இன்று (09.05.2029) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression) அதே கடல் பிராந்தியத்தில் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன்பின்னர் இது எதிர்வரும் 10ஆம் திகதி தென்கிழக்கு வங்காளவிரிகுடா மற்றும் அதனையொட்டிய கிழக்கு-மத்திய வங்காளவிரிகுடா, அந்தமான் கடல் பிராந்தியத்தில் ஒரு சூறாவளியாக (Cyclonic Storm) மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது சூறாவளியாக வலுவடையும் சந்தர்ப்பத்தில் இதற்கு நான் ஏற்கனவே கடந்த 04ஆம் திகதி குறிப்பிட்டது போன்று இதற்கு Yeman நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட மொக்கா (Mocha - Pronounce as Mokha) எனும் பெயர் இதற்கு வழங்கப்படும்.
இது ஆரம்பத்தில் எதிர்வரும் 11ஆம் திகதி வரை வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அதன் பின்னர் இது தனது நகரும் திசையை மாற்றி வடக்கு-வடகிழக்கு திசைய நோக்கி நகர்ந்து, வங்காளதேசம் மற்றும் மீயன்மார் கரையோர பகுதிக்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை இந்த சூறாவளியானது தமிழ்நாட்டை சற்று நெருங்கி மீண்டும் அது திசையை மாற்றி வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியில் ஊடாக செல்லலாம் எனவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை வரும் நாட்களில் தெரிவிக்கின்றேன்.
இந்த சூறாவளியினால் இலங்கைக்கு நேரடியான தாக்கம் இல்லை.
அதேவேளை மீனவர்கள் இந்த கடல் பிராந்தியத்தில் கடல் நடவடிக்கையின் போது மிகவும் அவதானமாக செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.