மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேசத்தில் உள்ள அரச வங்கியின் பெட்டகத்திலிருந்து சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை திருடிய குற்றச்சாட்டின் பேரில் வங்கி ஊழியர்கள் மூவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அவர்களில் துணை முகாமையாளர், செயற்பாட்டு முகாமையாளர் மற்றும் சேவை உதவியாளர் ஆகியோர் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஓட்டமாவடி பிரதேசத்தில் உள்ள அரச வங்கி ஒன்றில் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொது முறைப்பாடு பிரிவுக்கு அண்மையில் முறைப்பாடு கிடைத்திருந்தது. அதன்படி, வங்கிக்கு விசாரணைக் குழுவினர் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
கடந்த நவம்பர் மாதம் 10ஆம் திகதி அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளை மீண்டும் அடகு எடுப்பதற்கு நபர் ஒருவர் வந்த போது வங்கியில் இருந்த தங்க நகைகள் காணாமல் போனது முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. மறுநாளே வங்கி ஊழியர்கள் பெட்டகத்தை சோதனையிட்டதில் 13 தங்க நகைகள் அடங்கிய பொட்டலங்கள் காணாமல் போனது தெரியவந்தது.
காணாமல் போன தங்கத்தின் எடை 873 கிராம். இதன் பெறுமதி சுமார் 2 கோடி ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.