2024 ஆம் ஆண்டிற்கான குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பிற்கான நிரற்படுத்தல் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் குடிசன, வீட்டுவதிகள் தொகை மதிப்பு 2024 ஆம் ஆண்டிற்கான பிரதி தொகை மதிப்பு ஆணையாளர்கள் மற்றும் உதவி தொகை மதிப்பு ஆணையாளர்களுக்கு நிரற்படுத்தல் கட்டம் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபரும் தொகைமதிப்பு ஆணையாளருமான திருமதி காலமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்று (06) திகதி இடம் பெற்றது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் செயற்திட்டத்தின் மூலம் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் இலத்திரனியல் முறையில் ரெப்லட் (Tab) மூலம் மக்கள் தொகை மற்றும் வீட்டு வசதிகள் தொடர்பான தொகைமதிப்பு மேற்கொள்ளப்படவுள்ளமை தொடர்பாக இதன்போது விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
துல்லியமான தரவினை பிழையின்றி தரவேற்றம் செய்ய உத்தியோகத்தர்களை வழிப்படுத்த வேண்டும் என அரசாங்க அதிபர் இதன்போது ஆலோசனை வழங்கியிருந்தார்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஶ்ரீகாந்த், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவரூபரஞ்ஜினி முகுந்தன், தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைகளத்தின் வெளிக்கள முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளரும், மாகாண ஒருங்கிணைப்பாளருமான எஸ்.எச்.எம்.மன்சூர், மாவட்ட இணைப்பாளர் சிரேஸ்ட புள்ளிவிபரவியலாளர் ஜேயசம்பத் லியனகே , புள்ளி விபரவியலாளர் ரி.டி.எஸ் தர்ஷன, மாவட்ட புள்ளிவிபரவியலாளர் ரி.ஜெய்தனன், பிரதேச செயலாளர்கள், பிரதம கணக்காளர், மாவட்ட செயலக கணக்காளர், உதவி பிரதேச செயலாளர்கள், புள்ளிவிபரப் பிரிவின் வெளிக்கள மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் என துறைசார் திணைக்கள அதிகாரிகள் பலரும் இதன்போது கலந்து கொண்டுள்ளனர்.