(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சர்வதேச சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, இன்று திங்கட்கிழமை (05) மட்டக்களப்பில் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக சைக்கிள் பூங்காவிலிருந்து ஆரம்பமான நடைபவனி காந்திப் பூங்கா வளாகத்தை வந்தடைந்தது. அங்கு சர்வதேச சூழல் பாதுகாப்பு தினத்தை ஒட்டி நிருமாணிக்கப்படவுள்ள விழிப்புணர்வுத் தூபிக்கான அடிக்கல் சமயத் தலைவர்கள், பிரமுகர்கள் மற்றும் மாணவர்களால் நடப்பட்டது.
பின்னர் அங்கிருந்து ஆரம்பமான நடைபவனி சாள்ஸ் மண்டபத்தை வந்தடைந்து. அங்கு அதிதிகள் வரவேற்கப்பட்டனர்.
இதன்போது இயக்குனர் அருட்தந்தை ஏ.யேசுதாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு அனுமார் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஜெகதீஸ்வரன் குருக்கள், மட்டக்களப்பு பெரிய பள்ளியைச் சேர்ந்த மியாஸ் மௌலவி, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த அருட்தந்தை ஜீட் நிக்லஸ், ஜயந்திபுர விகாரையின் விகாராதிபதி கதறகம கதகெதற தேரர், மத்திய சுற்றாடல் அதிகார சபை உதவி இயக்குனர் எஸ். கோகுலன், கரித்தாஸ் ஸ்ரீலங்கா சூழல் பாதுகாப்புத் திட்ட தலைமை அதிகாரி எம்.சஜித் சில்வா, மட்டக்களப்பு மறை மாவட்டக் குரு முதல்வர் அருட்தந்தை ஜி.அலெக்ஸ் றொபேட், எகெட் நிறுவன அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், சர்வதேச சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டியோருக்குப் பரிசில்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.