டெங்கு நுளம்பினைக் கட்டுப்படுத்தும் வகையில் நீர் தேங்கும் கொள்கலன்களை அகற்ற துரித நடவடிக்கை

 






 
தற்போது நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு நுளம்பின் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பொதுமக்களை அறிவூட்டி, நீர் தேங்கும் கொள்கலன்களை அகற்றுவதற்கான துரித நடவடிக்கைகள் பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னமின் வழிகாட்டலில் இன்று (ஜூன் 08) இடம்பெற்றது.
இதன் போது பிரதேச செயலக பிரிவின் 45 கிராம சேவகர் பிரிவுகளிலும் மக்களுக்கு டெங்கு நுளம்பு பரவலுக்கு ஏதுவாகாதவாறு சூழலை எவ்வாறு பாதுகாப்பது என்ற வழிகாட்டலை வழங்கி, நீர் தேங்கக்கூடிய யோகட் கப், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி போத்தல்கள், சிரட்டைகள், தகரப் பேணிகள் போன்ற ஏராளமான கொள்கலன்களை சேகரிக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு சேகரிக்கப்பட்ட கொள்கலன்களை அகற்றும் நடவடிக்கைகள் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டன.
அத்துடன் பிரதேச செயலக சுற்றாடல், அபிவிருத்தி மற்றும் பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் வீடுகளை நேரில் சென்று சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டதுடன் எராளமான கொள்கலன்கள் முறையாக அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.