எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்ற வள்ளுவ நெறியே முற்போக்கு தமிழ் மரபு. அதன்படி ‘தாலி’ குறித்து கொஞ்சம் வாதிக்கலாம்.‘தாலி’ என்பது திருமணத்தின்போது மணமகன்,மணமகள் கழுத்தில் கட்டுவது மட்டுமல்ல, தமிழ் இலக்கியங்களின் வழி சிந்தித்தால் ‘தாலி
’ என்பது ஒரு பொதுவான அணிகலனேயாகும். இன்னும் சொல்லப்போனால் பெண்களைவிட ஆண்களோடு அதிகம் தொடர்பு டையதுதான் ‘தாலி’.பெற்றோர்கள் சிறுவர்களுக்கு 'ஐம்படைத் தாலி' அணி விக்கும் வழக்கம் இருந்துள்ளது. இதற்கான குறிப்புகள் இலக்கியங்களில் காணப்படுகின்றன.சங்கு, சக்கரம், வாள், வில், தண்டு என ஐந்து விதமான படைக்கருவிகளை செய்து அதை ஒரு கயிற்றில் தொடுத்து 'ஐம்படைத் தாலி' என்ற பெயரில் சிறுவர்களுக்கு அணிவிக்கும் பழக்கம் இருந்ததாக புறநானூறு 77ஆம் பாட்டின் 7ஆம் வரியிலும்,அகநானூறு 54ஆம் பாட்டின் 18ஆம் வரியிலும், திணைமாலை நூற்றிஐம்பதில் 66ஆம் பாட்டில் 3ஆவது வரியிலும், மணிமேகலையின் மூன்றாம் காதையில் 138ஆம் வரியிலும், கலிங்கத்துப் பரணியில் 244ஆவது பாட்டிலும் கூறப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட காலத்தில் இந்த ‘ஐம்படைத் தாலி’ அகற்றப்பட்டது. புறநானூறு
77 ஆவது பாட்டில் போர்க்களத்திற்கு வந்தவனைப் பார்த்து இவன் இன்னும் ஐம்படைத் தாலியை அகற்றாத சிறுவனாக இருக்கிறானே என்று கூறப் பட்டுள்ளது. ஆனால்,இன்றைக்கு இந்தப் பழக்கம் வழக் கொழிந்துவிட்டது.
‘தாலி’ என்கிற சொல்லே பனை ஓலை என்கிற வார்த்தையிலிருந்துதான் வந்திருக்கிறது. தாலமாகிய பனை ஓலையினால் செய்யப்பட்டதே ‘தாலி’. இன்னார் மகனுக்கு இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நாளில் இந்த நேரத்தில் கல்யாணம் செய்துகொள்வதாக பனை ஓலையில் எழுதி, அதை மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக குறிப்புகள் உள்ளன. இப்போதும் கூட முகூர்த்த ஓலை எழுதுவது என்பது சில பகுதிகளில் உள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தம் இப்போது தாளில்தான் எழுதப்படுகிறது.
பழம் பெருமையை பாதுகாப்பதாகக் கூறிக்கொள்பவர்கள் இப்போது பனை ஓலையையா கட்டிக்கொள்கிறார்கள்? பல திருமணங்களில்
பொன்னில் ‘தாலி' செய்யப்படுவதில்லை. ஒரு விரலி மஞ்சளை கயிற்றில் கட்டுகிற பழக்கமும் சிலரிடம் உள்ளது. பழந்தமிழர் மரபில் 'தாலி' கட்டும் பழக்கம் உண்டா என்று 1954ஆம் ஆண்டில் ஒரு பெரிய விவாதமே நடந்துள்ளது. இதைத் ஆரம்பித்து வைத்தவர் கவிஞர் கண்ணதாசன்.
பழங்காலத்திலேயே தமிழர்களிடம் ‘தாலி’ கட்டும் பழக்கம் இருந்தது என்று கூறினார் வரலாற்று அறிஞர் அப்பாதுரையார். கி.பி. 10ஆம் நூற்றாண்டுவரை தமிழ் நாட்டில் ‘தாலி’ குறித்த பேச்சே இல்லை என்றும், பெரும் புலவர் மா. இராஜ மாணிக்கனார்,பழந்தமிழர்களிடம் 'தாலி' என்ற வழக்கு இல்லவே இல்லை என்றும் உறுதிபடக் கூறினர். தமிழ்நாட்டில் கிடைத்த தொல் பொருட்களில் ‘தாலி' இல்லவே இல்லை.
இலக்கியப் பாடல்களில் பெண்கள் கழுத்தில் கட்டும் ‘தாலி’ குறித்த குறிப்பு எதுவும் இல்லை.சிலப்பதிகாரத்தில்தான் இதற்கான குறிப்பு வருகிறது. சிலப்பதிகாரத்தின் மங்கல வாழ்த்துப் பாடலில் ‘மங்கல அணி’ என்கிற வார்த்தை வருகிறது. ‘தாலி’ஒருபுறமிருக்கட்டும். திருமணமுறை காலத்து க்குக்காலம் மாறிக்கொண்டே வந்திருக்கிறது.
விவசாயத்தை அடிப்படையாகக்கொண்ட மக்கள் ஒரு காலத்தில் இரவில்தான் திருமணம் செய்து வந்தனர். இன்னமும்கூட இந்த வழக்கம் சில பகுதிகளில் உள்ளது. பழங்குடி மக்களாக இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிற திராவிட தொல்குடி மக்களிடையே ‘தாலி' கட்டும் பழக்கம் இப்போதும்கூட இல்லை.
நீலகிரி மாவட்டத்தில் வாழும் தொதுவர், கோட்டர் இன மக்களிடையே ‘தாலி’ கட்டும் பழக்கம் இல்லை.தெலுங்கு பேசும் தொல்குடி மக்களான ஏட்டர், ஏனாதிகள், ஏறக்கொல்லர், மலையாளம் பேசும் தொல்குடி மக்களான செருமார், முக்குருவர், பலியர்,அருணடர் போன்றோரிடத்தும், கன்னடம் பேசும் காப்பிலியர், கொரகர், காடுகுரும்பர், மொகயர் போன்ற மக்களிடமும் ‘தாலி’
கட்டும் வழக்கம் இல்லை.
தமிழ் மக்கள் ஒரு காலத்தில் திருமணம் கூட செய்து கொள்ளாமல் குடும்பமாக வாழ்ந்துள்ளனர். “பொய்யும்,வழுவும் தோன்றிய பின்னர், ஐயர் யாத்தனர் கரணம் என்ப” என்பது தொல்காப்பிய சூத்திரம். இதன் பொருள் என்ன வென்றால், ஆணும், பெண்ணும் களவு அறத்தின்படி குடும்பமாக வாழ்ந்து வந்தனர்.ஆடவர்கள் பெண்களை கைவிட்டு அந்தத் திருமணத்திற்கு சான்று ஏதுமில்லை என்று கூறிய நிலையில்தான் திருமணம் என்ற ஓர் ஏற்பாட்டை செய்தனர் என்பது இதன் எளிய பொருள். கணவன் இறந்து விட்டால் இளம் மனைவி வேறொருவரை திருமணம் செய்துகொள்வது இயல்பாகவே இருந்து வந்தது.வருணாச்சிரம ஆதிக்கம் கெட்டிப்பட்ட பிறகுதான் விதவைத் திருமணம் என்பது தடை செய்யப்பட்டு, இயல்பாக மறு திருமணம் செய்து கொள்பவர்களை அறுத்துக் கட்டுபவர்கள் என்று இழிவுபடுத்தும் போக்கு தோன்றியது.