இந்தியாவின் ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் ஹவுராவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது.
இதனால் ரயிலின் சில பெட்டிகள் அடுத்த தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது அந்த தண்டவாளத்தின் வழியாக வந்த யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவிரைவு ரயில் தடம்புரண்டு கிடந்த ரயில் பெட்டிகள் மீது மோதியது. அதேபோல் அடுத்த தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயிலும் தடம்புரண்டு இருந்த ரயில் பெட்டிகள் மீது மோதியது.
நேற்று இரவில் இருந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒடிசா, மேற்குவங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளும் ஒன்றிய அரசுகளும் ஒத்துழைப்புடன் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த கோர விபத்தில் 261 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
மேலும் 1,000க்கு மேல் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த ரயில் விபத்து சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இன்று ஒடிசா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி விபத்து நடந்த இடத்தில் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார்.
இந்நிலையில் தவறான சிக்கல் கொடுத்த காரணத்தாலே விபத்து நடந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.