மட்டக்களப்பு மாவட்ட மே மாதத்திற்கான அபிவிருத்திக் குழுக் கூட்டம்.



























(கல்லடி செய்தியாளர்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் மே மாதத்திற்கான அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை  (01) மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலும்,  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவின் ஏற்பாட்டிலும், கிழக்கு மாகாண ஆளுநரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான செந்தில் தொண்டமானின் பங்கேற்புடனும் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 இம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும், இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களுக்கான அனுமதியினை பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

அத்தோடு இம் மாவட்டத்தின்   விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், சுற்றாடல் உட்பட அனைத்து திணைக்களங்கள் தொடர்பான  விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டதுடன், அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநர் உடன் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளை பணித்துள்ளார்.

குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநரின் பணிக்குழுவினர் உள்ளிட்ட உயரதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட காணிக்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்ஜனி முகுந்தன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, உள்ளுராட்சி சபைகளின் தவிசாளர்கள், மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள், ஏனைய திணைக்களங்களின் உயரதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது விசேடமாக தேசிய ரீதியில் கிழக்கு மாகாணம் டெங்கு தொடர்பில் முதலிடம் வகித்து வருவதாகவும், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான குழுவொன்றினை ஆளுநர் நியமித்ததுடன், மிக விரைவாக மாகாணத்திலிருந்து டெங்கை இல்லாதொழிக்க அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டுமென அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அத்தோடு மாவட்டத்தின் மேச்சற்தரை மற்றும் மகாவலி  தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன்,  அவற்றிற்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கான கலந்துரையாடலொன்றினை எதிர்வரும் 26 ஆந் திகதி நிகழ்த்துவதாகவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.