(கல்லடி செய்தியாளர்)
நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய 100 நாட்கள் செயல் முனைவின் ஒருவருடப் பூர்த்தியினை முன்னிட்டு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு தழுவிய ஜனநாயக போராட்டம் இன்று திங்கட்கிழமை (31) மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் இடம்பெற்றது.
இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு முன்வைத்த சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை உறுதி செய்யக்கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பேரணியானது மட்டக்களப்பு காந்தி சிலை வரை சென்று, மீண்டும் படுகொலை செய்யப்பட்டு உயிர் நீத்த ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபி வரை பயணித்தது.
இப்போராட்டத்தின் போது "சமஷ்டியே எங்களுக்குத் தீர்வு", "வேண்டும் வேண்டும் சமஷ்டி வேண்டும்" "சமஷ்டியே எங்கள் அரசியல் தீர்வு" என்கின்ற கோஷங்களை எழுப்பியவாறு பேரணியில் கலந்து கொண்டதுடன், பேரணியின் இறுதியில் மக்கள் பிரகடன நூல் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.