விபுலானந்த தாசன்
கல்லடி பிரதேச மக்கள் சுவாமி விபுலானந்தருடன் அன்பாகவும், அன்னியோன்யமாகவும் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இப்பிரதேசத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது . 1922ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராமகிருஷண சங்கத்தில் இணைந்து, 1924 காலப்பகுதியில் துறவறம்
பூண்டு, இலங்கையில் தனது சேவையை ஆற்றுவதற்கு இராமகிருஷ்ண சங்கத்தினரால் பணிக்கப்பட்டார்.
சுவாமி விபுலானந்தர் கல்வி சிந்தனையில் மிகவும் ஆர்வமாக இருந்தார். கல்லடி பிரதேசத்தில் ஆங்கிலப் பாடசாலை ஒன்றை நிறுவவேண்டும் என்ற எண்ணக்கருவை ஆலய தர்மகர்த்தா K.O. வேலுப்பிள்ளை அவர்கள் கொண்டிருந்தார் . 1925 பங்குனி மாதம் இவர் தலைமையிலான ஆலய பஞ்சாயத்து சபை, சமூகம் சார்ந்த குழுவொன்று சுவாமி அவர்களை சந்தித்து கல்லடி பிரதேசத்திற்கு வருகை தருமாறு அழைப்பை விடுத்தது.
10.04.1925ம் ஆண்டு அழைப்பின் பிரகாரம் கல்லடி பிரதேசத்தில் கால் அடி பதித்தார்.
பிரதேசமே திரண்டு வந்து சுவாமிக்கு மாபெரும் வரவேற்பை அளித்து ஸ்ரீ சித்திவிநாயகர், ஸ்ரீ பேச்சியம்மன் அரசாளும் முன்றலுக்கு அழைத்து வந்தனர். கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ஆலய தர்மகர்த்தா அவர்கள் ஆங்கிலக் கல்வியின் அவசியத்தையும், ஆங்கிலப்பாடசாலை ஸ்தாபிப்புப் பற்றிய முக்கியத்துவத்தையும் சுவாமி அவர்களிடம் எடுத்துரைத்தார். இதனை செவிமெடுத்த சுவாமி அவர்கள், இப்பணியை செய்வதற்கு நில, நிதி, கட்டிட, ஆசிரிய வளங்கள் இன்றியமையாதது. இவற்றை ஒழுங்குகள் செய்து தரும் பட்சத்தில் கல்விப்பணியை பிரதேசத்தில் தொடரமுடியும் என்ற கருத்தைத் தெரிவித்தார். இச்சந்தர்ப்பத்தில் ஆலய தர்மகர்த்தா அவர்கள் இவ்வசதிகள் அனைத்தையும் தான் பொறுப்பேற்று நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார்.. இதனைத் தொடர்ந்து 26.11.1925 அன்று சித்திவிநாயகர், பேச்சியம்மன் ஆலயங்களில் நடைபெற்ற வழிபாடுகளின் பின் பிரதான கற்கள் ஆலய வளாகத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு சுவாமி அவர்களின் திருக்கரத்தால் ஆரம்பக்கட்டிடத்துக்கு அடிக்கல் நடப்பட்டது.
25.04.1928 அன்று ஆலய வளாகத்தில் வைத்து சுவாமிகள் ஊடாக இராமகிருஷண மிசனுக்கு சாசனம் மூலம் வளங்களை ஆலய தர்மகர்த்தா உறுதியளித்தபடி கையளித்தார். தற்போதைய சிவாநந்தா தேசிய பாடசாலை ஆரம்ப கட்டிடம், இராமகிருஷ ணமிசன் ஆரம்ப
பிரார்த்தனை மண்டபம் (தற்போதைய புனித ஸ்தலம்) ஆரம்ப மாணவரில்லம் அமைந்துள்ள 01 ஏக்கர் (KOVஅவர்களுக்குரியது) தற்போதைய விளையாட்டு மைதானம் , விடுதிகள் அமைந்துள்ள நிலம் 09 ஏக்கர்.( K O V அவர்களுக்குரியது)
தற்போதைய சிவபுரி, பாலர் பாடசாலை, மணிமண்டபம், விபுலானந்தர் சமாதிகள் அமைந்துள்ள நிலம் 04 ஏக்கர் (K O V. அவர்களுக்கும், நொத்தாரிஸ் நல்லதம்பி அவர்களுக்கும் சொந்தமான பிரிபடா நிலம்)
அத்துடன் 1909ம் ஆண்டு கதிர்காமத்தம்பி உடையார், சபாபதிப்பிள்ளை உடையார் ஆகியோரால் ஸ்தாபிக்கப்பட்ட சைவப்பள்ளிக் கூட கட்டிடங்களுடன் சேர்ந்த நிலமும் , (தற்போதையை விவேகானந்தா மகளிர் கல்லூரி) 1912ஆம் ஆண்டு இப்பாடசாலையின் வளர்ச்சிக்காக வைப்பிலிட்டிருந்த 5000 ரூபாய்களையும் சிவாநந்தா வித்தியாலய மேலும் கட்டிட அபிவிருத்திக்காகவும் வழங்கப்பட்டது, இவை
சாசனத்தில் அடங்கியிருந்தது. பிரதேச மக்களின் பெரும் ஆதரவு சுவாமியை மகிழ்வடையச் செய்தது.
1929 சித்திரை மாதம் ஆங்கிலப் பாடசாலை ஆரம்பம் பற்றிய கூட்டம் , சித்தி விநாயகர் , பேச்சி அம்மன் ,இராம கிருஷ்ண பரம ஹம்சர் ஆசியுடன் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. சுவாமி அவர்கள் தனது குருவான சுவாமி சிவாநந்தரின் நாமத்தை பாடசாலைக்கு
சூட்டும் எண்ணத்தை வெளிப்படுத்தி, ஆலய தர்மகர்த்தாவிடம் ஸ்தாபகர்
என்று பொறிப்பதற்கு
நிழற்படமொன்றை தருமாறு கோரினார்.
ஸ்தாபகர் என்ற கௌரவத்தையும், அந்தஸ்தையும் சுவாமிக்கு வழங்கவே இப்பிரதேசம் விருப்புக் கொண்டுள்ளதை ஆலய தர்மகர்த்தா தெரிவித்தார். அதனை சுவாமி மறுத்த போதிலும் கூடியிருந்த பெரும் திரளான
மக்களின் அன்பான கோரிக்கையை நிராகரிக்க முடியாத நிலையில் ஏற்றுக்கொண்டார்..
15.04.1929 சமய அனுஷடானப்படியும், 22.04.1929 அதிகார பூர்வமாகவும், 01.05.1929 முறையான வகுப்புக்களுடனும் பாடசாலையின் கல்விப்பணி ஆரம்பமாகியது. இவ் நிகழ்வுகளே இராமகிருஷ்ண மிசன் எமது பிரதேசத்தில் அமைய ஏதுவாக அமைந்தது என்பது வரலாற்று உண்மை.
26.06.1929 அன்று வண்ணார் பண்ணையில் தங்கியிருந்த மாணவர்களை சுவாமி அவர்கள் கல்லடி உப்போடைக்கு இடம் மாற்றினார். அவர்களுக்குத் தேவையான விடுதி வசதிகள், சுவாமி அவர்கள்
தங்குவதற்கான வீட்டு வசதிகளையும் பிரதேசத்தில் வாழ்ந்த நன்கொடையாளர்களே செய்து கொடுத்தார்கள்
.சுவாமி அவர்கள் எமது பிரதேசத்திற்கு வருகை தந்ததன் பயனாக, இராமகிருஷ;ண மிஷன் தோற்றம் பெற்றது. மிசன் துறவிகள் பலர் இங்கு வருவதாகவிருந்தது. அதன் நிமித்தம் பாடசாலையும் இராமகிருஷ்ண மிசனும் அதன் சேவைகளும் மக்களுக்கு நல்லதொரு வழிகாட்டலாக அமைந்திருந்தது.
கல்வி, சமய, கலாசார மற்றும் பண்புகளை எதிர்கால சந்ததியருக்கு மிகவும் எளிமையாகவும் தனது ஆற்றலாலும் இராமகிருஷ்ண சங்கத்தில் இருந்து புகட்டி வந்த சுவாமி அவர்கள் 19.07.1947 அன்று இறைபதம் அடைந்தார்.
சுவாமி அவர்கள் ஆலய வளாகத்திற்கு அவ்வப்போது வந்து மாலை நேரங்களில் மக்களுடன் உரையாடுவார். அச்சந்தர்ப்பம் ஒன்றில் தனது உடல் அடக்கம் செய்யப்படவேண்டிய விருப்பத்தையும், இடத்தையும் ஆலய தர்மகர்த்தா, சாண்டோ சங்கரதாஸ், சாண்டோ தியாகராஜா
ஆகியோரிடம் அடையாளப்படுத்தியிருந்தார்.
இதற்கமைவாக இராமகிருஷ்ண மிசன் உடன் உரையாடி சுவாமி அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இன்று அந்த இடம் விபுலானந்தர் சமாதியாக போற்றி வணங்கப்படும் இடமாக மிளிர்கின்றது.
சுவாமி அவர்கள் இப்பிரதேசத்தில் மக்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்பதே உண்மை. சுவாமி விபுலானந்தர் அவர்களின் 76வது சமாதி தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது.
உசாத்துணை
1. 25.04.1928 அன்று அமரர் KO..வேலுப்பிள்ளை அவர்கள் சுவாமி விபுலானந்தர் மூலம் இராமகிருஸ்ண மிஷனுக்கு கையளித்த 2809 இலக்க சாசனம்
2.திரு.சா.முத்துக்குமாரன் (ஓய்வு பெற்ற உதவி பதிவாளர் நாயகம் வடக்கு கிழக்கு மாகாணம்) திரு.கதிர்காமத்தம்பி குருநாதன் (ஓய்வு பெற்ற காணி ஆணையாளர்) ஆகியோரால் கூறப்பட்ட ஆதார பூர்வமான விடயங்கள்
3.அமரர்களான வை.க.விநாயகமூர்த்தி சாண்டோ சங்கரதாஸ், சாண்டோ தியாகராஜா, டாக்டர் வி.சிவலிங்கம், மு.நல்லரெட்ணம், இ.கந்தசாமி, K.O.Vகதிர்காமத்தம்பி, திருமதி. செல்லத்தங்கம், தம்பிப்பிள்ளை ஆகிய பெருந்தகைகள் சமூகத்திற்கு நேரடியாக தெரிவித்த கருத்துக்கள்.
4.மட்டக்களப்பின் பண்பாட்டியல் - பிரபல ஆய்வாளர் காசுபதி நடராஜா அவர்கள்
(தினக்கதிர் 25.12.2000)
5.விவேகானந்தா மகளிர் கல்லூரி 90ஆம் ஆண்டு, நூற்றாண்டு மலர்கள்
6.சிவானந்தா தேசிய பாடசாலை பவளவிழா மலர்.