இந்தியக் கடனுதவி இல்லாத காலத்திலும் இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும்
மருந்துகளில் 80% மருந்துகள் இந்தியாவில் இருந்தே இறக்குமதி
செய்யப்படுவதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் சுகாதார அலுவல்கள் பற்றிய
அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரிவித்தனர்.
சுகாதார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சர் கெஹெலிய
ரம்புக்வெல்ல தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடிய போதே சுகாதார
அமைச்சின் அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் தெரிவித்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன இது தொடர்பில் வினவிய போது,
அதிகாரிகள் இதனைத் தெரிவித்ததுடன் அண்மைக்காலமாக இந்தியக் கடனுதவியின் கீழ்
கொண்டுவரப்பட்ட மருந்துகள் பயன்படுத்தப்படுவதாக அவர்கள்
சுட்டிக்காட்டினர். மருந்துகளை கொண்டுவருவதற்கு உரிய பிரிவினர் நடவடிக்கை
எடுக்கத் தவறியிருந்தால், மருந்து கிடைக்காமல் மக்கள் உயிரிழப்பார்கள் என
அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல
குறிப்பிடுகையில், பேராதனை வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவத்தின் போது,
அந்த வாட்டில் இருந்த 12 நோயாளர்களுக்கு அந்த மருந்தை வழங்கியிருந்ததாக
குறிப்பிட்டார். இந்த ஆண்டில் 167,000 பேர் இந்த மருந்தைப்
பயன்படுத்திருப்பதாகத் தெரிவித்தார்.
அத்துடன் வைத்தியசாலைகளுக்காக இந்த மருந்துகள் 230,000
வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த மருந்து 2013 ஒக்டோபர் 21 ஆம் திகதி பதிவு
செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், தரக்குறைவான மருந்துகள் எது என்பதற்கு வரைவிலக்கணம் இல்லாததால்,
தரக்குறைவான மருந்து என்பதை தான் நிராகரிப்பதாக அமைச்சர் கௌரவ கெஹெலிய
ரம்புக்வெல்ல இதன்போது தெரிவித்தார்.