மின்சாரம் தாக்கி உயிரிழந்த காவத்தமுனை மீனவரின் குடும்பத்திற்கு தியாகி அறக்கொடை மனிதாபிமான உதவி :

 







 

 மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனையில் மீனவர் ஒருவர் அண்மையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருந்தார்.

காவத்தமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான 54 வயதுடைய முத்துவான் அன்சார் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார்.

மீன்பிடித்தொழிலை தனது ஜீவனபயமாகக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த இவர், வழக்கம் போல் ஓட்டமாவடி ஆற்றிலுள்ள ஆமையோடை குடாவில் மீன் பிடிக்கச்சென்ற சமயம் வீடு திரும்பாததால் அவரைத்தேடும் பணியில் உறவினர்கள்
ஈடுபட்டனர்.

அவர் கவத்தமுனைப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள தனியாருக்குச் சொந்தமான இறால் பண்ணையின் பாதுகாப்புக்கருதி வேலிகளுக்கு பொருத்தப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இச்சம்பவம் தொடர்பாகவும் இக்குடும்பத்தின் கஷ்ட நிலைமை குறித்தும் ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ்  தியாகி அறக்கொடை நிதியத்தின் இஸ்தாபகத் தலைவரும் சமூகச் செயற்பாட்டாளருமான வாமதேவன் தியாகேந்திரனிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க தற்போதுள்ள அடிப்படைத் தேவைகளை அக்குடும்பம் பூர்த்தி செய்வதற்கேதுவாக ஒரு இலட்சம் ரூபாய் உதவித்தொகை முதற்கட்டமாக தியாகி அறக்கொடை நிதியத்தின் இணைப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் அவர்களின் மூலம் அக் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா மீடியா போரத்தின் பணிப்பாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் அவர்களின் அழைப்பின் பேரில் வாழைச்சேனை பிரதேச உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ஏ.எல்.எம்.ஜெமீல், வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி லசந்த பண்டார மற்றும் ஓட்டமாவடி வர்த்தக சங்கத்தலைவர் ஏ.சீ.எம்.நியாஸ் ஹாஜி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு இவ்வுதவித்தொகையினை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது கருத்துத்தெரிவித்த ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ்

தியாகி அறக்கொடை நிதியம் என்பது எவரிடமும் நிதியினை வசூலித்து மக்களுக்கு கொடுக்கும் அமைப்பல்ல. வாமதேவன் தியாகேந்திரன் எனும் தனி மனிதனின் உழைப்பாகும். சகல இன மக்களும் ஒன்றே எனும் உயர்ந்த எண்ணங்கள் அவரது உயர்ந்த பண்புகளாகும். அதனடிப்படையிலேயே மனிதாபிமானத்தோடு இவ்வாறான உதவிகளை நாடு பூராகவும் முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்