அத்தனகலு நீர் வீழ்ச்சிக்கு அருகில் இருபது வயது யுவதி ஒருவர் செல்ஃபி எடுக்கச் சென்ற போது வழுக்கி நீரில் மூழ்கி காணாமற்போனதாக நிட்டம்பு காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
காணாமல் போன யுவதி, கொழும்பு குணசிங்கபுர அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 20 வயதுடைய பாத்திமா பஸ்னா எனவும், அவர் பெட்டகோடோவில் உள்ள பாடசாலை ஒன்றில் தன்னார்வ ஆசிரியையாக பணியாற்றியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
குணசிங்கபுரவில் வசிப்பவர்கள் நேற்று பிற்பகல் தமது உறவினர்கள் வசிக்கும் திஹாரிய வீடொன்றுக்கு வந்துள்ளதாகவும், அந்த குழுவினருடன் வந்த விருந்தினராக இந்த யுவதியும் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்த யுவதி உட்பட 7 பேர் அத்தனகலு நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்ற நிலையில் குறித்த யுவதி பாறையில் இருந்து தவறி விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நீரில் வீழ்ந்த நிலையில் தனக்கு நீச்சல் தெரியாது என்று கூறி உதவி கோரி யுவதி கூக்குரலிட்டதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேற்று (3) பிற்பகல் வரை காவல்துறையினர் அப்பகுதி மக்களுடன் இணைந்து யுவதியை கண்டுபிடிக்க முயன்றும் பலன் கிடைக்கவில்லை கடற்படையினர் குழுவொன்றை வரவழைத்து யுவதியை தேடும் பணியை தொடர்வதாக நிட்டம்புவ காவல்துறையினர் தெரிவித்தனர்.