வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் வட்டவானில் மேற்கொள்ளப்பட்டு வரும் இறால் வளர்ப்பு திட்டத்தினை நிறுத்தக் கோரி பிரதேச மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாங்கேணி காயன்கேணி வட்டவான் மற்றும் ஆலங்குளம் இறாலோடை போன்ற
பிரதேச மீனவ அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்ட பேரணியை
முன்னெடுத்திருந்தனர்.
அப்பகுதி நன்னீர் மீன்பிடிப்போரும் அன்றாடம் ஜீவனோபாய தொழிலை
மேற்கொள்ளும் மக்களும் பாதிக்கப்படுவதாகவும் அதனை தடுத்து நிறுத்துமாறு
கோரியும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
காயன்கேனி பழைய பாலத்திலிருந்து ஆரம்பமாகி திருமலை வீதி ஊடாக சென்று
வட்டவான் இறால் பண்ணைக்கு சென்று பண்ணைக்கு முன் பதாதைகளை ஏந்தியவாறு
கோசங்களை எழுப்பினார்கள்.
குறித்த இறால் பண்ணையின் அருகில் அமைந்துள்ள வாவி அசுத்தமடைந்து
வருவதாகவும் குறித்த இறால் பண்ணையில் இருந்து திறந்து விடப்படும் அசுத்த
நீரினாது ஆற்றில் கலக்கப்படுவதனால் மீன்கள் இறந்து காணப்படுவதுடன் மீன்
இறால் வளங்கள் அழிந்து கொண்டு போவதினால் தாங்கள் பொருளாதார ரீதியில்
பின்நோக்கி போவதாகவும் குறிப்பிட்டனர்.
இதனை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்
இதனை கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும், இப் பிரச்சினைகளை தீர்க்க
நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.