ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பெண்களுக்கான அழகு கலை நிலையங்களை மூட தலிபான் ஆட்சியாளா்கள் உத்தரவிட்டுள்ளனா்.

 

 


 ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பெண்களுக்கான அழகு கலை நிலையங்களை மூட தலிபான் ஆட்சியாளா்கள் உத்தரவிட்டுள்ளனா்.

இது குறித்து அந்த நாட்டின் சா்ச்சைக்குரிய மதக் கலாசாரப் பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் முகமது சித்திக் அகீஃப் மஹாஜா் கூறுகையில், தலைநகா் காபூல் மற்றும் அனைத்து மாகாணங்களிலும் பெண்கள் சிகையலங்காரம் செய்துகொள்வதற்கான மையங்கள் வரும் 24 ஆம் திகதிக்குள் மூடப்பட வேண்டும் என்று ஒரு மாதத்துக்கு முன்னரே அந்த மையங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

எனினும், அதற்கான காரணம் குறித்து அவா் எதையும் தெரிவிக்கவில்லை. ஏற்கெனவே பெண்களின் கல்வி, பெரும்பாலான வேலைவாய்ப்புகளுக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளது நினைவுகூரத்தக்கது.

கடந்த 1990 களில் அல்-காய்தா தலைவா் பின்லேடனுக்கு அடைக்கலம் அளித்தமைக்காக, ஆப்கன் மீது அமெரிக்கா படையெடுத்து தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது. எனினும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கனை விட்டு அமெரிக்கப் படையினா் கடந்த 2021 இல் வெளியேறியதற்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினா்.

அப்போது, தங்களது முந்தைய ஆட்சியைப் போலின்றி, அனைவருக்கும் சம உரிமை அளிக்கப்படும் என்று அளித்த உறுதிமொழியை மீறி தலிபான்கள் பெண்களின் உரிமைகளைப் பறித்து வருவது சா்வதேச அளவில் கண்டத்துக்குள்ளாகி வருகிறது.