ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, எதிர்வரும் 20 ஆம் திகதி புதுடெல்லி செல்லவுள்ளார். அவர், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை, எதிர்வரும் 21 ஆம் திகதி சந்திக்கவுள்ளார். ஜனாதிபதியாக பதியேற்று சரியாக ஒரு வருடத்தின் பின்னர் இந்தியாவுக்குச் செல்வது விசேட அம்சமாகும். அந்த விஜயத்தின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை ஒக்டோபரில் மேற்கொள்ளவுள்ளார்.
சீனப் பயணத்தின் போது, புதிய முதலீடுகளைத் தேடுவது, வர்த்தக உடன்படிக்கைகளை எட்டுவது மற்றும் தடைப்பட்ட திட்டங்களுக்கான நிதியை மீண்டும் தொடங்குவது ஆகியவை தொடர்பில் கலந்துரையாடுவது ஜனாதிபதிகளின் முக்கியப் பணியாகும்.
கொழும்பு துறைமுக நிதி நகரத்திற்கான முதலீடுகளை விரைவுபடுத்துதல் மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை-கடவத்தை-மீரிகம பகுதிக்கான நிதியை மீள ஆரம்பிப்பது குறித்து எக்ஸிம் வங்கியுடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்படும்.
அதேவேளை ஹம்பாந்தோட்டை பகுதியைச் சுற்றி புதிய முதலீடுகளைத் தேடுதல் கலந்துரையாடல் பட்டியலில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியைப் பெறுவதற்கு எதிர்பார்க்கப்பட்ட ஒரு சுத்திகரிப்புத் திட்டத்தில் சீனா முதலீடு செய்வதும் இந்த விஜயத்தின் போது கலந்துரையாடப்பட்டு இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.