பேத்தாழை பொது நூலகத்தில் விபுலம் ஆவணக் காப்பகம் அங்குரார்ப்பணம்!













(கல்லடி செய்தியாளர்)


சுவாமி விபுலானந்தரின் 76 ஆவது நினைவு தினமான புதன்கிழமை அடிகளார் தொடர்பான ஆவணங்கள் அடங்கிய விபுலம் ஆவணக் காப்பகம்  அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந் நிகழ்வில், சிறுவர் வாசகர் வட்ட உறுப்பினர் ஒருவரினால் விபுலானந்தரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து இக் காப்பகம் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

அடிகளார் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் மற்றும் வாசகர்களின் நன்மைகருதி அச்சு ஆவணங்கள், மின்னியல் நூல்கள், காணொளிகள் அடங்கிய இறுவெட்டுக்கள், அடிகளாரின் புகைப்பட தொகுப்புக்கள் போன்ற பல ஆவணங்களின் சேகரிப்பைக் கொண்டுள்ள இப்பகுதியில் QR குறியீட்டின் உதவியுடன் மேலதிக தகவல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நூலகப் பொறுப்பாளர் ம.பிரகாஷ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ச.நவநீதன், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் கோறளைப்பற்று பிரதேச சபைக்கான சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்  அ.ஹாரூன், கோறளைப்பற்று பிரதேசத்திற்கான கலாசார உத்தியோகத்தர் சிவகுமார், எழுத்தாளர் ச.மணிசேகரம், பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலய அதிபர் க.கதிர்காமநாதன், ஆலோசனைக் குழு உறுப்பினர் திருமதி ஸோபா ஜெயரஞ்சித், வாசகர் வட்ட உறுப்பினர்கள், வாசகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளினால் இக்காப்பத்திற்கென சுவாமி விபுலானந்தரின் தகவல்கள் அடங்கிய நூல்கள், இறுவெட்டுக்கள் என்பன நூலக பொறுப்பாளரிடம் கையளிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.