தமிழ் பொலிஸ் தேவை இல்லை. தற்போதுள்ள பொலிஸில் தமிழர்களை நியமிக்கவும் .

 


சர்வகட்சி மாநாட்டில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார்.

சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்ட நிலையில், சுரேன் ராகவன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“இங்கே கடைசியாக நடந்தது தமிழ் கட்சிகளுக்கிடையில் என்ன செய்ய வேண்டும் என்பதில் ஒருமித்த முடிவு இல்லை. எம்.பி.சுமந்திரன், எம்.பி.விக்னேஸ்வரன் மற்றும் ஏனையவர்கள் மத்தியில் இதற்கு மேல் அதிக அதிகாரம் தேவையா?எங்களுக்கு 13 போதுமா? எங்களுக்கு தேர்தல் வேண்டுமா என்ற கருத்துக்கள் காணப்பட்டன. அவர்களே அந்தப் பிரச்சினையை தீர்க்க வேண்டும். சகோதரத்துவத்தை கட்டியெழுப்ப வேண்டுமானால் ஒற்றுமை தேவை. பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்ட வேண்டும். வடக்கில் போன்று தெற்கிலும் பல பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றன.  அடுத்த மாதம் மீண்டும் சந்திப்போம் என்று நினைக்கிறேன். இன்னும் தெளிவான மற்றும் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வரலாம் என்பதே எனது நிலைப்பாடு. நான் ஆளுநராக இருந்த காலத்திலும் இதனை கூறினேன். தமிழ் பொலிஸ் தேவை இல்லை. தற்போதுள்ள பொலிஸில் தமிழர்களை நியமிக்கவும் என்றார்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல எனவும் அது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம் என்பதால் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (26) பிற்பகல் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.