“அருவியாள் கிராமிய சந்தை” திறப்பு விழா

 

 



















 பங்காளர் நிறுவனங்களின் நிதி அனுசரணையுடன்  இணைந்து  மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பினால் வாகரைப் பிரதேச பெண்களின் உள்ளுர் உற்பத்தி முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையிலும் மற்றும் மீனவப் பெண்களின் சுயதொழில் முயற்சியினை வலுப்படுத்தும் முகமாகவும் வாகரைப் பிரதேச பெண்களுக்கென்று பிரத்தியேகமான கிராமிய சந்தை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அதன் திறப்பு விழாவானது நேற்று திருமலை வீதி, மாணிக்கபுரம், வாகரையில் அமைந்துள்ள வாகரை பிரதேச சபை சந்தைக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது.
 
இந் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான திருமதி மயூரி ஜனன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதில் கண்காணிப்பு மற்றும் மீளாய்வு உத்தியோகத்தர், அருவி பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்கள், பங்காளர் நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வின்போது வாகரை பிரதேச மீனவப் பெண்கள் குழுக்களுக்கான சீர்பாததேவி மீனவப் பெண்கள், வன்னி நாச்சியார் மீனவப் பெண்கள், திமிலர் மீனவப் பெண்கள், செம்படவன் மீனவப் பெண்கள் குழுக்களுக்கான கருவாடு விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலுக்கு தேவையான பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இச் சுயதொழில் முயற்சியில் 40 பெண் குடும்பங்கள் நேரடிப் பயனாளர்களாக தெரிவு செய்யப்பட்டு பயன் பெறுகின்றனர்.

இவ் விற்பனை நிலையத்தில் குளத்து கருவாடு உட்பட அனைத்து கருவாடு வகைகளும்,  தேன், கிராமிய பாரம்பரிய உணவுகள்,பனம்பொருள் உற்பத்தி  பொருட்கள், மற்றும் நாட்டு முறிவு எண்ணெய் வகைகள்  போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது