மேலும் இரண்டு வகையான மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் இந்த இரண்டு வகை மயக்க மருந்துகளும் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிட்டார்.
இவ்வாறு நீக்கப்பட்ட மயக்க மருந்துகளுக்குப் பதிலாக வேறு மயக்க மருந்தொன்று கிடைக்கப்பெற்றுள்ளதால், அவற்றை வைத்தியசாலைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக வைத்தியர் குறிப்பிட்டார்.
தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு ஒருபோதும் அனுமதி கிடையாது எனவும், அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக எப்போதும் தரத்திற்கு அமையவே மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் வைத்தியர் தெரிவித்தார்.
ஆனால் சில சந்தர்ப்பங்களில் சில மருந்துகளை பயன்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படுவதுடன், அவ்வாறான சந்தர்ப்பங்களில் அந்த மருந்தை பயன்பாட்டிலிருந்து நீக்குவது வழமையான நடைமுறையாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன மேலும் விளக்கமளித்தார்.