மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி வித்தியாலய காணி விடுவிப்பு தொடர்பிலான கள விஜயத்தின் போது பாடசாலைக்குரிய காணியை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு குருக்கள்மடம் இராணுவ முகாம் அமைத்திருக்கும் எல்லைக்குளுள்ள குருக்கள்மடம் கலைவாணி வித்தயாலயத்திற்குச் சொந்தமான காணியை விடுவிப்பது தொடர்பாக ஆராயும் கள விஜயம் சனிக்கிழமை (01) மேற்கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது குருக்கள்மடம் கலைவாணி வித்தயாலயத்துக்குச் சொந்தமான கட்டடங்கள் மற்றும் மைதானத்தில் குருக்கள்மடம் இராணுவ முகாம் அமைத்திருக்கின்றமை தொடர்பில் தெரியப்படுத்தி இராணுவ முகாமை விடுவித்து அக்கட்டடங்கள் மற்றும் மைதானத்தை மீண்டும் பாடசாலைக்கு ஒப்படைப்பது சம்மந்தமாக கோவிந்தன் கருணாகரம் எம்.பியினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
கலந்துரையாடப்பட்டமைக்கு இணங்க குறித்த இடத்திற்கு கோவிந்தன் கருணாகரம் எம்.பி உள்ளிட்ட அதிகாரிகள் குழு சென்று சம்மந்தப்பட்ட இராணவத்தினருடன் கலந்துரையாடி எட்டப்பட்ட தீர்மானங்கள் அடுத்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு ஆளுநரினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாக குருகக்கள்மடம் இராணுவ முகாம் அமைந்துள்ள இடத்துக்கு களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது.
இவ்விஜயத்தில் எம்.பி உட்பட கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர், மண்முனை தென்எருவில் பற்றுப் பிரதேச செயலாளர், வலயக் கல்வி பணிப்பாளர், பாடசாலை அதிபர் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி அங்கு பிரசன்னமாகியிருக்கவில்லை என்றபோதும் இரண்டாம் நிலை அதிகாரி அங்கிருந்தார். அவருடன் கலந்துரையாடியதற்கமைவாக ஓர் அறிக்கை தயாரிப்பதென முடிவெடுக்கப்பட்டது.
இராணுவம் தற்போது அந்தப் பாடசாலை கட்டடங்கள் அடங்கிய 2.9 ஏக்கர் நிலப்பரப்பைப் பாவிப்பதற்கு மேலதிகமாக அரச காணி 5 ஏக்கரையும் பாவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
எனவே பாடசாலைக்குரிய கட்டடம் இருக்கும் காணியையும், மைதானத்தையும் விடுத்து ஏனைய 5 ஏக்கரையும் பாவிப்பதற்கு எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கபப்படாதததையடுத்து அவர்கள் பாடசாலைக்குரிய காணி, மற்றும் கட்டிடங்களை விடுவிக்கும் படியாக நடவடிக்கையெடுப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அடுத்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு காணி விடுவிப்புக்குரிய தீர்மானம் நிறைவேற்றப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.