வருடாந்தம் இலங்கை போக்குவரத்து சபைக்கு வீதி விபத்துக்களினால்
நூற்றி இருபது கோடி ரூபாவிற்கும் அதிகமான நட்டம் ஏற்படுவதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து வருடங்களில் ஏழாயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள்
விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், ஒரு வருடத்தில் ஆயிரத்து நானூறுக்கும்
மேற்பட்ட பேருந்துகள் விபத்திற்குள்ளாகியுள்ளன.
இவ்வாறு விபத்திற்குள்ளாகும் பேருந்துகளை சரிசெய்து, இயக்குவதற்கு
சுமார் நாற்பத்தேழு கோடி ரூபாவும் , சட்டச் சிக்கல்களுக்கு எண்பது கோடி
ரூபாய்களும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே வீதி பாதுகாப்பு விபத்து
தடுப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இத்திட்டத்தின் பிரகாரம், மேல்மாகாண டிப்போக்களுடன் இணைக்கப்பட்டுள்ள
அறுநூறு லங்காம சாரதிகள் பயிற்சித் திட்டத்திற்கு அனுப்பப்பட உள்ளதாகவும்
அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பேருந்து சாரதிகள் விபத்து பதிவு புத்தகத்தை பேணுவது
கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து குற்றங்களில் சிக்கிய சாரதிகளும்
அந்தந்த பிழைகள் பற்றி புத்தகத்தில் குறிப்புகள் செய்ய வேண்டும் என
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பதவி உயர்வுக்கான இந்த வேலைத்திட்டத்தின் மூலம் வாகன
விபத்துக்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை
தலைவர் லலித் டி அல்விஸ் மேலும் தெரிவித்துள்ளார்.