அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்!








(கல்லடி செய்தியாளர்)

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு ஸ்ரீ அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளான இன்று புதன்கிழமை (16) வசந்த மண்டபத்தில் வீற்றிருந்த விநாயகப் பெருமானுக்கு சிறப்பு தீபாராதனை இடம்பெற்றது.

மங்கல வாத்தியங்கள் முழங்க, பிராமண ஆச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க, விநாயப் பெருமான் உள்வீதி வலம் வருதல் இடம்பெற்றது.

பின்னர் விநாயகப் பெருமான் பல்லா யிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோசத்தின் மத்தியில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியன ஒருங்கே அமையப்பெற்ற அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் மாமாங்க பிள்ளையார் ஆலய தீர்த்த கேணியில் இடம்பெற்றது.

இதன்போது பிதிர்கடன் தீர்க்கும் கிரியைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தீர்த்தோற்சவத்தின்  நிறைவில் சித்தர்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.