மட்டக்களப்பு மாவட்டம் உட்பட முழுக் கிழக்கு மாகாணத்திலும் தொழிலற்றோர் வீதம் அதிகரித்து வருகிறது.

 


மட்டக்களப்பு மாவட்டம் உட்பட முழுக் கிழக்கு மாகாணத்திலும் தொழிலற்றோர் வீதம் அதிகரித்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் தெரிவிக்கிறது.

மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களம் மாவட்ட செயலக தொழில் நிலையம் அக்ஷன் யுனிற்றி லங்கா ஆகியவை இணைந்து மாவட்டத்தின் மாபெரும் தொழில் கல்விச் சந்தை மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியில் சனிக்கிழமை (12)  இடம்பெற்றது.

மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுமார் 30க்கும் மேற்பட்ட உள்நாட்டு வெளிநாட்டு தொழில் வழங்கும் நிறுவனங்கள், அரச தனியார்துறை தொழிற் கல்வி நிறுவனங்கள் கலந்து கொண்டன.

சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடனடித் தொழில் வாய்ப்புக்களோடு இந்நிறுவனங்கள் இந்த தொழிற் சந்தையில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தொழில் கல்விச் சந்தையை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய மாவட்டச் செயலாளர் கலாமதி, மட்டக்களப்பு மாவட்டத்தில் 2021ஆம் ஆண்டு 4 சதவீதமாக இருந்த தொழிலற்றோர் சதவீதம் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் 7.2 ஆக அதிகரித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் மொத்த தொழிலற்றோர் சதவீதம் 22 ஆக உள்ளது.

உயர்தரக் கல்வியை முடித்தவர்கள், பல்கலைக்கழகம் செல்லாத ஒரு தரப்பினர், சாதாரண தரத்தில் விடுபடுகின்ற தரப்பினர், வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியவர்கள் இவ்வாறு பலதரப்பட்டவர்கள் வேலையற்று இருக்கிறார்கள்.

அரசாங்க உத்தியோகங்களை விட தனியார் தொழில் துறைகளில் அதிக வேலைவாய்ப்புக்கள் நிறைந்து காணப்படுகின்றன.

தனியார் தொழில் துறையின் மூலம்தான் உண்மையான பொருளாதார அபிவிருத்தி அடைந்து கொள்ள முடியும். எனவே, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எல்லோரும் சிந்திக்க வேண்டும்.” என்றார்.