ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் பங்கேற்புடன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்!!


போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களின் பங்கேற்புடன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று 31.08.2023 இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவ.சந்திரகாந்தன் அவர்களின் தலைமையிலும், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களது ஏற்பாட்டிலும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கமலத் , கிழக்கு மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான செந்தில் தொண்டமான் அகியோரது பங்கேற்புடனும் ஆகஸ்ட் மாதத்திற்கான  ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது இன்றைய தினம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில்  மீளாய்வு  செய்யப்பட்டதுடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கான முன்மொழிவுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் இம்மாவட்டத்தின் போக்குவரத்து, விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், சுற்றாடல், மீன்பிடி உட்பட்ட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சட்டவிரோத கனிம அகழ்வுகளில் ஈடுபடுபவர்களுக்கெதிராக கடுமையான சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் எனவும் அவ்வாறானவர்களின் அனுமதி பத்திரங்கள் இரத்து செய்யப்பட வேண்டுமெனவும்,  குறிப்பாக சட்டவிரோத கனிம அகழ்வு நடவடிக்கைகள் கணிசமான அளவில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகப்பிரிவில் இடம்பெறுவதாகவும் இராஜாங்க அமைச்சர் சிவ சந்திரகாந்தன் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார். 

மேலும் அவர் கருத்தும் தெரிவிக்கையில் இவ்வாறான சட்டவிரோத அகழ்வுகளில் ஈடுபடுபவர்களால் உண்மையாகவே தமது வாழ்வாதாரத்தினை பூர்த்தி செய்வதற்காக இக் கனிம அகழ்வு தொழிலில்  ஈடுபடுவோருக்கும் பல தடைகள் விதிக்கபடுவதாகவும் அவ்வாறானவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும் என்பதனையும் வலியுறுத்தியிருந்தார்.

மேலும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினூடாக மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அதிகளவான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலான தெளிவூட்டல்களும் துறைசார் அதிகாரிகளால் தெளிவுபடுத்தப்பட்டது.

குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பெருந்தெருக்கள் மற்றும் போக்குவரத்து வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே.மாயாதுன்னே, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சிவகுமார், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதேச செயலாளர்கள்,உள்ளுராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள், செயலாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்று பொறியியலாளர்  லிங்கேஸ்வரன் , தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூ.பிரசாந்தன், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் இணைப்பு செயலாளர் மாணிக்கவாசகர் தயாபரன் மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகள், ஏனைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.