(கல்லடி செய்தியாளர்)
சர்வதேச காணாமல் போன உறவுகளின் தினத்தினை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி இன்று புதன்கிழமை (30) காலை மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணியானது காந்திப் பூங்காவைச் சென்றடைந்தது.
இவ்வார்ப்பாட்டப் பேரணியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
"எங்கே எங்கே உறவுகள் எங்கே?", "சர்வதேச விசாரணை வேண்டும்", "ஊடகவியலாளர்களை அச்சுறுத்தாதே", "நீதி வேண்டும்" என்கின்ற கோசங்களை எழுப்பியவாறு பதாகைகள் மற்றும் காணாமல் போன உறவுகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வார்ப்பாட்ட பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அமைப்புக்களின் உறுப்பினர்கள், சமூகமட்ட அமைப்புக்கள், அரசியல் பிரமுகர்கள், அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.