எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்,
கல்குடா
மலையக மக்களின் 200 ஆண்டுகால வரலாற்றை நினைவு கூரும் வகையில் 'மாண்புமிகுமலையகம்' என்ற தொனிப்பொருளில் தலைமன்னாரிலிருந்து 12 நாட்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நடைபயணம் சனிக்கிழமை மாத்தளையில் சிறப்பாக நிறைவடைந்தது.
மேற்படி நடைபயணத்தை வரவேற்கும் முகமாக கிழக்கு சமூக அபிவிருத்தி மையம் ஏற்பாட்டில் தமிழ் முஸ்லிம் உறவுகள் தங்களின் ஆதரவை வெளிப்படுத்தும் முகமாக மான்புமிகு மலையக மக்களுடன் இணைந்து "மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுப்போம்" பிரச்சாரத்தில் தம்புள்ளையில் இருந்து நாவுல வரை அவர்களுடன் இணைந்து நடை பயணம் மேற்கொண்டனர்.
மலையக மக்களுடன் இணைவோம் அவர்களின் கண்ணியத்தையும் சம உரிமைகளையும் உறுதி செய்வோம்! என்ற வாசகங்களை பொருந்திய கோஷங்களும் நடைப்பயணியின் எழுப்பப்பட்டது.
இன்று இறுதி நாள்
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் வரவேற்பு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இன்றைய தினம் காலை மாத்தளை பாக்கியம் தேசிய பாடசாலை மைதானத்திலிருந்து கலாசார ஊர்வலம் ஒன்று இடம் பெற்றதாக நிகழ்வின் அமைப்பாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரு மான மு.சிவஞானம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாத்தளை மாவட்டத்தின் பொது அமைப்புகள் அனைத்தும் பங்குபற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை 11,12 ஆகிய திகதிகளில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் மாத்தளை மகாத்மா காந்தி சர்வதேச நிலையத்தில் 'தேயிலை சாயம்’ எனும் தலைப்பிலான சித்திரக் கண்காட்சி யொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இறுதியில் மாத்தளை பிரகடனமும் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வுகள் அனைத்திலும் மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக இன,மத,மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் நாட்டில் உள்ள தன்னார்வ தொண்டர்கள், பொதுமக்கள்கள் கலந்து கொண்டு தமது ஆதரவினை முழுமையாக வழங்கியிருந்தார்கள்.