கண்டி தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹெரா சிறப்பாக நிறைவு செய்யப்பட்டமையை உறுதிப்படுத்துவதற்கான ஆவணம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

 


தேசத்தின் வண்ணமயமாக கலை நிகழ்வாக கருதப்படும் கண்டி தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹெரா பண்டைய முறைமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் சிறப்பாக நிறைவு செய்யப்பட்டமையை உறுதிப்படுத்துவதற்கான ஆவணம் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல அவர்களினால்  (31) கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

பெரஹெராவில் பங்குபற்றிய கலைஞர்களுக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. “எசல பெரஹெர பாரய” நிதி அன்பளிப்பு பிட்டிசர விகாரைக்கு ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து, மத்திய மாகாண கலாசார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட “பூஜனிய தலதா சங்ஸ்குறுத்திய” (போற்றத்தக்க தலதா கலாசாரம்) என்று நூலும் அன்பளிப்புச் செய்யப்பட்டது.

பெரஹெராவை ஏற்பாடு செய்திருந்த தியவடன நிலமே உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மத மற்றும் தேசிய நிகழ்வாக மாத்திரமின்றி இலங்கையின் கலாசாரத்தை உலகறியச் செய்யும் வண்ணமயமான கலாசார கலை நிகழ்வான வரலாற்று சிறப்புமிக்க கண்டி எசல பெரஹெராவை பாதுகாத்து தொடர்ச்சியாக நடத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

யானைகளை பாதுகாக்க வேண்டிய அதேநேரம், எமது பாரம்பரிய சம்பிரதாயங்களை பாதுகாத்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பெரஹெராவுக்கான யானைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அடுத்த வருடத்தில் சுற்றுலாத்துறையில் முன்னேற்றத்தை அடைந்துகொள்வதற்கான வேலைத்திட்டத்தில் கண்டி வரலாற்று சிறப்புமிக்க எசல பெரஹெரா முக்கிய பங்கு வகிக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.