நாளை ( 2023.10.14) முதல் இலங்கை இந்திய கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

 


தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேயன் துறைமுகத்திற்கு எதிர்வரும் 14-ஆம் திகதி முதல் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் பயணம் மேற்கொள்ள கடவுச் சீட்டு கட்டாயம் இருக்க வேண்டும். மேலும், சுற்றுலா விசா பெற்றுக் கொண்டுதான் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் நடைமுறைகளே நாகப்பட்டினம் துறைமுகத்திலும் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பயணி, கப்பல் பயணத்தின் போது தன்னுடன் 50 கிலோ எடையிலான பொருட்களை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார். அதில் 20 கிலோவை பயணி தன்னுடன் வைத்துக் கொள்ளும் படியாகவும், 30 கிலோ கப்பலில் வைக்கக்கூடிய பை என இரண்டாகப் பிரித்து வைத்திருக்க வேண்டும்.

இந்தியர் கப்பல் பயணத்தில் இலங்கைக்குச் சென்றால் அவர் இந்தியா திரும்புவதற்கான விமானம் அல்லது கப்பல் பயணச் சீட்டை காண்பித்தால் மட்டுமே இலங்கைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்.

ஆனால், இலங்கையைச் சேர்ந்த பயணிக்கு இந்த நடைமுறை பின்பற்றப்படாது.

விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகள் எப்படி சுங்கத்துறையினரின் ஆய்வுக்கு உட்படுத்தப்படுமோ அதேபோல் கப்பல் பயணத்தின் போதும் ஆய்விற்குட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.