களுவாஞ்சிக்குடியில் 36 ஆவது நினைவு தினம் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

 

 

 மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பகுதியில் கடந்த 23.10.1987 ஆம் திகதி இந்திய இராணுவத்தினரால் 11 பேர் கொலை செய்யப்பட்டு  36 ஆவது நினைவு தினம் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.



  (23) மாலை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் பிரத்தியேக செயலாளர் விமலநாதன் மதிமேனன் தலைமையில் இந்நிகழ்வு ஆரம்பமானதுடன் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மெழுகுதிரிகளை ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,

களுவாஞ்சிக்குடியில் வைத்து 1987 ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி எனது பெரியப்பா சக்கரவர்த்தி இராசமாணிக்கம் உட்பட பலர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இதில் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி மக்கள், இந்த பிரதேசத்தை சேர்ந்த கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவு தூபி ஒன்றினை சி.மு இராசமாணிக்கம் அமைப்பினர் இந்நிகழ்வின் 30 ஆவது நினைவு தினத்தில் (2017) அன்று இவ்விடத்தில் நினைவகத்தை அமைத்திருந்தனர்.

இன்றைய நாள் உயிரிழந்தவர்களது 36 ஆவது நினைவு தினமாகும்.மறைந்த இராசமாணிக்கம் சக்கரவர்த்தி அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் ஏனையவர்களது பங்குபற்றலுடன் அஞ்சலி நிகழ்வை இன்று (23) மேற்கொண்டோம். ஆனால் இது போன்று வடகிழக்கில் கடந்த காலங்களில் இலட்சக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த கொல்லப்பட்ட மக்களுக்கு இன்று வரை நீதி எதுவும் கிடைக்காத சூழ்நிலையில் தொடர்ந்தும் நீதியை கேட்டு மக்கள் போராடி கொண்டு இருக்கின்றார்கள்.இன்றை நாளில் நாங்கள் இவ்வாறு உயிரிழந்த மக்களுக்கு உரிய நீதி கிடைக்கப்பெறும் வரை ஓயாது போராடிக்கொண்டு இருப்போம் என்பதை அவ்விடத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன் என தெரிவித்தார்.