தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்தவரைக்கும் அவர்களின் அரசியல் துறையே தமிழ்த் தேசியக் கட்சிகளின் வழிகாட்டும் பீடமாக இருந்தது. அவர்கள் எதை முன்மொழிந்தார்களோ அதையே எமது கட்சித் தலைவர்கள் வழிமொழிந்தார்கள் என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டிள்ளார்.
தமிழ் மக்களுக்கான ஒரு தேசியத் தலைமை இல்லாத நிலையில் தமிழ் அரசியற் கட்சிகள் ஒவ்வொன்றும் திக்கொன்றாக அவற்றினது எஜமானர்களின் அல்லது நிதியூட்டு நபர்களின் மனங்கோணாதவாறு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கட்சிகளை வழிப்படுத்த மக்கள் இயக்கமொன்று பலம் பெற வேண்டும் என்றார்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆறுகள் ஒரு போதும் பின்னோக்கிப் பாய்வதில்லை. அது போன்றுதான் வரலாறும் பின்னோக்கிப் பாயாது. வரலாறு எங்களை எந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறதோ, அந்த இடத்திலிருந்துதான் வரலாறு தந்த படிப்பினைகளையும் உள்வாங்கிக் கொண்டு நாம் முன்னோக்கிப் பயணிக்க வேண்டும். ஆனால், இந்தக் கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ள தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தயாராக இல்லை.
முள்ளிவாய்க்காலில் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர்
அவர்கள் முப்பது, நாற்பது வருடங்கள் பின்னால் சென்று அங்கிருந்து போராட
நினைக்கிறார்கள். அதன் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் காலப்பொருத்தமற்று
அடிக்கடி அறிவிக்கப்படும் கடையடைப்புப் போராட்டங்களாகும் என்றார்.