சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) இரண்டாம் தவணையை நாடு பெற்றுக் கொள்ளக் கூடாது என்பதே தற்போதைய எதிர்க்கட்சிகளின் ஒரே ஆசை.

 


சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) இரண்டாம் தவணையை நாடு பெற்றுக் கொள்ளக் கூடாது என்பதே தற்போதைய எதிர்க்கட்சிகளின் ஒரே ஆசை என்று ஜனாதிபதி தொழிற்சங்கத்தின் பணிப்பாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

பிட்டகொட்டேயில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் திங்கட்கிழமை (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

நாணய நிதியத்திடம் இருந்து இரண்டாவது தவணையான 700 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தற்போது செயற்பட்டு வருவதாகவும் அதற்கான மீளாய்வுக் கூட்டங்கள் செப்டெம்பர் மாதம் நடைபெற்றதாகவும் சுட்டிக்காட்டினார்.

பேச்சுவார்த்தையின் போது சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் விதிமுறைகளில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

எனினும், அடுத்த மூன்று வாரங்களுக்குள் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்து எஞ்சிய கடன் தவணைகள் பெற்றுக்கொள்ளப்படும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.