(கல்லடி செய்தியாளர்)
மயிலம்பாவெளி உதவும் கரங்கள் சிறுவர் இல்லத்தில் அமைப்பின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் சதாசிவம் ஜெயராஜாவின் தலைமையில் வாணி விழா நிகழ்வுகள் இல்ல கேட்போர் கூடத்தில் நேற்று சனிக்கிழமை (21) இடம்பெற்றது.
இதன்போது உதவும் கரங்கள் சிறுவர் இல்ல மாணவர்களின் கலைநிகழ்வுகளும், போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில்
கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோகண, மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உதித் லியனகே, கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சந்திரா மகேந்திரநாதன், மட்டக்களப்பு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சாமினி ரவிராஜா, மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர்களான திருமதி யோகானந்தகிரி புஸ்பவாணி , திருமதி. மோகனகுமார் டிலாந்தி மற்றும் சைவப்புலவர் திருமதி ஞானசூரியம். சிவானந்தஜோதி , கவின் மகள் அதிபர் மணிவண்ணன் சுதாகரி ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோகண அவர்கள் உதவும் கரங்கள் அமைப்பின் பணிப்பாளர்களால் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
இங்கு உரையாற்றிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோகண ,
எதிர்கால தலைவர்களாகிய சிறுவர்கள் நெல்சன் மண்டேலா, சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி லீக்குவான்லீ, அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன், கௌதமபுத்தர் போன்றோரது வாழ்க்கை வரலாறு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊக்கப்படுத்தலின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றியதுடன், மாணவர்கள் தாங்கள் கடந்து வந்த பாதையையும், உதவியவர்களையும் மறக்காது நல்ல ஆளுமைமிக்க சமூகத்தலைவர்களாக மாறவேண்டும் என உதவும் கரங்கள் சிறுவர்களை வாழ்த்தினார்.