இரவு நேரங்களில் பல்கலைக்கழக விடுதிகளை பகிடிவதை சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் சோதனை.

 


இரவு நேரங்களில் பல்கலைக்கழக விடுதிகளை பகிடிவதை சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் சோதனையிட தீர்மானித்துள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

விடுதிகளில் பெரும்பாலும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் புதிதாக உள்வாங்கப்பட்ட மாணவர்களுக்கு தொல்லைகள் ஏற்படுவதாகவும் அவர்கள் பகிடிவதைக்கு உள்ளாகுவதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த சோதனை நடவடிக்கைகளுக்கு பல்கலைக்கழக ஒழுங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாணவர் ஆலோசகர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவித்த இராஜாங்க அமைச்சர், பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகளைத் தடுக்க தேசிய குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

துன்புறுத்தல்கள் மற்றும் பகிடிவதைகள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க வட்ஸ்அப் எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த எண்ணுக்கும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதாகவும் அவர் கூறினார். 

இந்த எண்ணில் பெறப்படும் ஒவ்வொரு முறைப்பாடுகளும் உடனடியாக விசாரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.