சிறுவர்களை நற்பண்புகளோடு வளர வைக்கின்ற மிகப் பெரிய பொறுப்பு நம்மெல்லோருக்கும் உள்ளது- -கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்-



 
இன்றைய சிறுவர்களே நாளைய சந்ததியின் செயல்களுக்கான உத்வேகமாக இருக்கப் போகிறார்கள். சிறுவர்களின் எண்ணங்களும் செயல்களும் அழகிய முன்மாதிரிகள் கொண்டு நெறியாள்கை செய்யப்படல் வேண்டும் எனறு தனது சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் கிழக்கு மாகாண ஆளுனரும் இ.தொ.கா. தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள சிறுவர் தின வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

சிறுவர்கள் தங்கள் உலகை எப்போதும் வியப்போடும் ஆய்ந்தறிகின்ற ஆர்வத்தோடும் காண்கிறார்கள்.அவர்களின் கனவுகளுக்கு ஆயுள் கொடுக்கின்ற அவகாசத்தை நாம் தோற்றுவிக்க வேண்டியுள்ளது.

வெற்றியைப் பெறுகின்ற சிறுவர்களை ஊக்கப்படுத்தும் நாம்,தோல்வியைக் கண்டு துவண்டு விடக் கூடாது என்ற உண்மையையும்,உத்வேகத்தையும் வழங்க வேண்டும். முயற்சிகள் மூலமாக எதனையும் சாதிக்கலாம். கனவுகளை வெல்வதற்கு விடாமுயற்சி முக்கியமானது என்பதை அவர்கள் மனதில் விதைக்க வேண்டும்.

ஒரு சமூகமாக எமது சிறுவர்களை நற்பண்புகளோடு வளர வைக்கின்ற மிகப் பெரிய பொறுப்பு நம்மெல்லோருக்கும் இருக்கிறது. சக மனிதர்களை மதித்து மரியாதை செய்கின்ற பண்பை நாம் சிறுவர்களின் மனதில் நிறைவாக நிரப்ப வேண்டும்.

நமது வாழ்க்கையை முக்கியமானதாக மாற்றுகின்ற அளப்பரிய சக்தி சிறுவர்களுக்கே உண்டு.சமூகச் சூழலில் அதி உன்னதமான வளமாக இருப்பவர்களும் சிறுவர்கள் தான். அவர்களின் கட்டற்ற கற்பனாசக்திக்கு நிகர் அவர்களே தான்.

அற்புதமான அழகிய பண்புகளோடு நம் சிறுவர்கள் வளர்கின்ற போது,அவர்கள் மகத்துவம்,விழுமியம்,நம்பிக்கை, நற்சிந்தனை ஆகியவற்றைக் கொண்டு அவர்களைப் பின்தொடர்கின்ற சந்ததிக்கும் உத்வேகம் கொடுக்கின்ற அற்புதமானவர்களாய் உருவெடுப்பார்கள்.

எனவே இன்று சிறுவர் தினத்தைக் கொண்டாடும் அனைத்து சிறுவர்களுக்கும் சிறுவர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.