இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் வான் படை தளபதி அசம் அபு ரகபா கொல்லப்பட்டுள்ளார்.

 


 


ஹமாஸின் வான் படை பிரிவு தலைமை தளபதியாக அசம் அபு ரகபா செயல்பட்டு வந்தார். அந்த அமைப்பின் பீரங்கி தகர்ப்பு ஏவுகணைகள், ட்ரோன்கள், பாராகிளைடர்கள், வான்வழி கண்காணிப்பு ஆகிய பிரிவுகள் அசம் தலைமையின் கீழ் செயல்பட்டு வந்தன. கடந்த 7 ஆம் திகதி  இஸ்ரேல் நகரங்கள் மீது பாராகிளைடர்கள், ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அசம் அபு ரகபா மூளையாக செயல்பட்டார்.

இஸ்ரேல் உளவு அமைப்பான ஷின் பெட்டை சேர்ந்த உளவாளிகள், காசா பகுதியில் அவரை மிக தீவிரமாக தேடி வந்தனர். நீண்ட தேடுதலுக்குப் பின்னர் வடக்கு காசாவின் இரகசிய சுரங்கப் பாதையில் அசம் பதுங்கியிருக்கிறார் என கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இடத்தை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள்  கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தின. இதில் ஹமாஸின் வான் படை பிரிவு தலைமை தளபதி அசம் அபு ரகபா உட்பட ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.