மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தைச் சேர்ந்த உதவி பொலிஸ் பரிசோதகர் சபேசன் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 


மட்டக்களப்பு வவுணத்தீவு பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில்  அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் உதவி பரிசோதகர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று (11) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் நீதிமன்ற பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த நாவற்குடா பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான உதவி பரிசோதகரான சபேசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த சனிக்கிழமை வவுணதீவிலுள்ள தனது பண்ணைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வவுணதீவு பகுதியில் அவருக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டதையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகி இருந்தார்.

இதனையடுத்து அவரை போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

அவரின் சடலத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவரின் இறுதிகிரிகை பொலிஸாரின் மரியாதையுடன்  நாளை இடம்பெறவுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.