சீன புவி இயற்பியல், அறிவியல் ஆய்வுக் கப்பலான “Shi Yan 6” என்ற சீனக் கப்பலுக்கு இந்த நாட்டுக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்திருந்தார்.
குறித்த ஆய்வுக் கப்பலான “Shi Yan 6” உடன் இணைந்து மேற்கொள்ளப்படவிருந்த ஆய்வுத் திட்டத்தில் இருந்து தாம் விலக முடிவு செய்துள்ளதாக அண்மையில் ருஹுணு பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.
சீனக் கப்பலின் வருகை குறித்து அண்டை நாடான இந்தியா அதிருப்தியடைந்துள்ள நிலையிலேயே இந்த முடிவை ருஹுணு பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.
இதற்கமைய “Shi Yan 6” ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி இலங்கையில் நங்கூரமிடுவதாக இலங்கை கடற்படையினர் முன்னர் உறுதிப்படுத்தியிருந்த போதிலும், இறுதி நேரத்தில் இலங்கை அதிகாரிகளால் இராஜதந்திர மட்டத்தில் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த கப்பல் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.