ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த மாத இறுதியில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் திட்டமிடப்பட்ட சந்திப்பின் போது சீனாவுடனான கடனை மறுசீரமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.
ஒக்டோபர் 16 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ள தனது விஜயத்தின் போது சீன ஜனாதிபதி ஜின்பிங் மற்றும் பல தலைவர்களை ஜனாதிபதி ரணில் சந்திக்க உள்ளார்.
பெல்ட் அண்ட் ரோட் முயற்சியின் 10ஆவது ஆண்டு உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடன் நிவாரணம் தொடர்பில் சீன ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
சீனாவிடமிருந்து கடன் நிவாரணத்தைப் பெறுவதில் இலங்கை சவால்களை எதிர்கொண்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன என்றாலும், இருதரப்புக் கடனை மறுசீரமைக்கும் பொறிமுறை குறித்து கலந்துரையாடல்கள் தொடர்வதாக தெரியவருகிறது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு ஆதரவாக ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பங்கேற்புடன் ஒரு கூட்டுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ள அதே வேளையில், இந்தியா மற்றும் பாரிஸ் கிளப்பில் இருந்து இலங்கை ஏற்கனவே கடன் உறுதிமொழிகளைப் பெற்றுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சீன விஜயத்தின் போது கடன் நிவாரணம் தொடர்பில் கணிசமான முன்னேற்றத்தை ஜனாதிபதி அலுவலகம் எதிர்பார்க்கிறது.
கடந்த 12 மாதங்களில் இரண்டு தடவைகள் சீனாவின் அண்டை நாடான ஜப்பானுக்கு விஜயம் செய்திருந்த போதிலும், கடந்த வருடம் பதவியேற்ற பின்னர் ஜனாதிபதி விக்கிரமசிங்க சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள முதலாவது விஜயம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.