கூட்டணி அரசியல் குறித்து ஜனாதிபதி நன்கு புரிந்து கொள்ள வேண்டும், அமைச்சரவை மாற்றத்தின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாமல், கூட்டணித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், கட்சிக்கு இடையே அமைதியைப் பேணவும் ஜனாதிபதி அறிந்திருக்க வேண்டும் என்றார்.
“நல்லாட்சி அரசாங்கத்தின் போது இரு தலைவர்களும் இரு வேறு திசைகளில் சென்றதன் விளைவு தேசத்தின் ஸ்திரமின்மை மீது தாக்கம் ஏற்படுத்தியது” என்று அவர் கூறினார்.
எதிர்காலத்தில் முடிவெடுக்கும் போதும் கூட்டணி அரசியலில் ஈடுபடும் போது ஜனாதிபதி பிற தலைவர்களுடன் கலந்துரையாடுவது உத்தமம் என தாம் நம்புவதாக நாமல் தெரிவித்தார்.
அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றம் குறித்து கருத்து தெரிவித்த அவர், இது அமைச்சரவை மாற்றமாக கருதப்பட முடியாது எனவும், இது பதவி மாற்றம் மட்டுமே எனவும் தெரிவித்தார்.
“அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்ள ஜனாதிபதிக்கு உரிமை உண்டு. எவ்வாறாயினும், இந்த விடயத்தை கூட்டணிகளுக்கு அறிவிக்கவும் கலந்துரையாடவும் அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது” என நாமல் சுட்டிக்காட்டினார்.