அங்கொட முல்லேரியா பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு, சியம்பலாப்பே பிரதேசத்தில் தலை மற்றும் கால்கள் இல்லாத நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
வர்த்தகரான குறித்த சந்தேக நபர் தனது சட்டத்தரணிகளுடன் சபுகஸ்கந்த பொலிஸில் வந்து சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு உதவியதாகக் கூறப்படும் நபரும் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் சியம்பலாப்பே தெற்கில் வசிக்கும் 53 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் இரண்டாவது சந்தேக நபரான 48 வயதுடைய நபரும் அதே பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பாகங்களை வெட்டுவதற்கு சந்தேகநபர், பிரதான சந்தேக நபருக்கு உதவியதாக மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட போது, பெண்ணின் சடலத்தை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனமும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களிடம் சப்புகஸ்கந்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.