இந்த ஆண்டு இறுதி வரை நீர் கட்டணங்கள் திருத்தப்பட மாட்டாது .

 


இந்த ஆண்டு இறுதி வரை நீர் கட்டணங்கள் திருத்தப்பட மாட்டாது என்றும், 2024 ஜனவரி முதல் நீர் கட்டண சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்த அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான்,

“நீர்க் கட்டணம் தொடர்பில் பல்வேறு தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. நீர்க் கட்டணம் இதற்கு மேல் அதிகரிக்கப்பட மாட்டாது. கடந்த ஓகஸ்ட் மாதம் நீர்க் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும்கூட, குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் குறைந்தளவில் நீரைப் பயன்படுத்துபவர்களுக்கும் நீர்க் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. மின் கட்டண அதிகரிப்பு உட்பட குடிநீர் சுத்திகரிப்புப் பணிகளுக்கான செலவுகள் அதிகரிப்பும் கடந்த காலங்களில் நீர்க் கட்டண அதிகரிப்பில் தாக்கம் செலுத்தியது. அடுத்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் நீர்க்கட்டண சூத்திரம் அறிமுகப்படுத்தப்படும்.” என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.