வடகிழக்கில் விடுக்கப்பட்ட ஹர்த்தால் அழைப்புக்கு கிழக்கு மாகாண மக்கள் முழுமையான ஆதரவினை வழங்கவேண்டும்.

 


 வடகிழக்கில் விடுக்கப்பட்ட ஹர்த்தால் அழைப்புக்கு கிழக்கு மாகாண மக்கள் முழுமையான ஆதரவினை வழங்கவேண்டும் என, தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைப்பு
விடுத்துள்ளது.
முதன்முறையாக தமிழ் தேசிய கூட்டமைப்பாக அனைத்து கட்சிகளும் இணைந்து நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பு, மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ, தமிழீழ விடுதலைக்கழகம் புளோட், ஜனநாயக போராளிகள் கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
ஊடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் இந்த போராட்டம் தொடர்பான அழைப்பினை விடுத்தார்.
மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு தீர்வினை காணும் வகையில் ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானத்தினை ஒரு வார காலத்திற்குள் நடைமுறைப்படுத்துவதாக
தெரிவித்துள்ள நிலையில், அவற்றினை நடைமுறைப்படுத்தாவிட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரியளவிலான நிர்வாக முடக்கத்தினை முன்னெடுக்கவேண்டிய சூழ்நிலையேற்படும்
எனவும் இதன்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டது.