கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்களின் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது. 2023-11-02

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளன ஏற்பாட்டில் நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அமைவாக, பல்கலைக்கழக சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. அரசாங்கத்தினால் பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறைப்பு, மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அரசாங்கம் போதிய நடவடிக்கை எடுக்காமை, பல்கலைக்கழக ஊழியர்களுக்கு நீண்டகாலமாக வழங்கப்படாதுள்ள சம்பள அதிகரிப்பை வழங்க கோருதல், அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கேற்ப ஊதிய அதிகரிப்புச் செய்ய வலியுறுத்தல், பல்கலைக்கழகங்களில் காணப்படும் பதவி வெற்றிடங்களை நிரப்பி நிருவாக விடயங்களை சுமுகமாக முன்னெடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளல், பல்கலைக்கழக ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை சீராக்குதல், இலவச உயர்கல்வி முறைமையை ஒழித்து தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்கும் அரசின் சிந்தனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தல், ஊழியர் சேமலாப மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிகளை வேறு தேவைகளுக்கு பயன்டுத்தும் அரசின் எத்தனங்களுக்கு எதிர்ப்பு வெளியிடல், அரசின் செயற்பாடுகள் காரணமாக கல்விமான்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதால் நாட்டின் கல்விக் கட்டமைப்பில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க தவறியமை உட்பட பல்வேறு விடயங்களை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக நிருவாக உத்தியோகத்தர்கள் சங்கம் என்பன இணைந்து முன்னெடுத்த இந்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் நடைபெற்றது. பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தி சுமார் ஒரு மணிநேரம் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயர் பதவிநிலை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும்.